கசடற கல்

As a kid I used to read a lot of Tamil monthlies like Kumudam, Anandha Vikatan and Rani that my parents used to buy. Of course I have read a lot of Pattukkottai Prabakar and Rajeshkumar (famous detectives Vivek and Rupala) as well. But the short stories always inspired me a lot, short and simple to read and one single sketch that showed a scene from the story.

Here is one such attempt I made, and my first one too at a short story. A good friend said this has good resemblance to my personal life but not sure.


தொழிற்க்கல்வி நுழைவுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் முறையில் அரசாங்கக் கல்லூரியில் இடம் கிடைத்ததில் அகிலனுக்குப் பெருமகிழ்ச்சி. அதுவும் அவன் ஆசைப்பட்டப் பாடம், ஆசைப்பட்டக் கல்லூரி. அவன் அம்மா அப்பாவின் நெடுநாள் கனவு நினைவானது. கல்லூரி விடுதி வாழ்க்கையின் சுவாரஸ்யம் அகிலனுக்குத் புல்லரிப்பைத் தந்தது. படிப்பு முடிந்து முதல் மாதச் சம்பளத்தில் அப்பா அம்மாவுக்கும், தங்கைக்கும் என்ன வாங்கி கொடுக்க போகிறோம் என்று ஒரு பட்டியல் தயாராக இருந்தது.

"பொட்டியில எல்லாத்தையும் எடுத்து  வெச்சிட்டியாடா?" என்ற அம்மாவின் குரல் அகிலனை சிந்தனையில் இருந்து எழுப்பியது.

"எல்லாம் எடுத்து வெச்சிட்டேம்மா. கொடில காயற துணிய மட்டும் நாளைக்கு கிளம்பறப்ப எடுத்து வெச்சுக்கிறேன்." அகிலன் மீண்டும் சிந்தனைக்கு செல்ல முயன்றான்.

"அகிலா, இந்தா இதுல கைச்செலவுக்கு  காசு இருக்கு. மாச மாசம் பீஸ் நான் மணி  ஆர்டர்ல அனுப்பிடறேன், சரியா?" அப்பொழுது தான் வீட்டிற்க்குள் நுழைந்தார் அப்பா.

"சரிங்க அப்பா." அப்பா கையில் இருந்து பணத்தை வணங்கி பெட்டியில் வைத்தான் அகிலன்.

"அண்ணா, உன்னுடைய பழைய புத்தகத்தை எல்லாம் மறக்காம என்கிட்டே குடுத்துட்டு போ. நீ பாட்டுக்கும் என்னோட ப்ரெண்ட் கலாகிட்ட கொடுத்துட்டு போயிடாத?" சீண்டினாள் அவன் தங்கை கயல்விழி.

"உன் கிளாஸ்ல வேற ஒரு நல்ல பொண்ணா இருந்தா சொல்லு, அவளுக்கு கொடுக்கறேன். உன்ன மாதிரி வாயாடிக்கெல்லாம் புக்ஸ் கெடயாது போ." அகிலன் தங்கைக்கு பதிலடி கொடுத்தான்.

"உன் மூஞ்சிக்கு இன்னும் நல்ல பொண்ணா கேக்குதா?" முகத்தை விளையாட்டாக சுழித்தால் கயல்விழி.

அண்ணன் தங்கையின் அன்றாட விளையாட்டு இன்றும் தொடர்ந்தது. அதே நேரம் அகிலனின் அடிமனதில் ஏதோ வருடியது. வாழ்க்கையில் முதன் முறையாக அப்பா, அம்மா, தங்கையைப் பிரிந்து வெகுதூரம் போகப் போகிறான்.  அம்மாவின் தினசரி அன்பும் ஆறுதலும், அப்பாவின் அன்றாட அறிவுரையும் அரவணைப்பும், தங்கையின் சிரிப்பும் சீண்டலும் இனி எட்டாக்கனியோ என்றோ பயந்தான். கல்லூரி வாழ்க்கையும் அங்கு கிடைக்கப் போகும் கல்வியையும் நினைத்து ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், குடும்பத்தின் பிரிவு மனதை கவ்வியது. வாழ்க்கையில் சந்திக்கப் போகும் வெற்றிகளுக்காகக் குடும்பத்தை பிரிய துணிந்தான்.

கல்லூரி பிடித்திருந்தது, நகர வாழ்க்கையும் வித்தியாசமாக இருந்தது. அம்மாவின் கையால் சாப்பிட்ட அகிலனுக்கு விடுதி சாப்பாடு தொண்டையை கடக்க மறுத்தது. சுவையை மறந்து வயிற்றை நிரப்பினான் நாளைக் கல்லூரி முதல் நாள் என்ற குஷியில்.

கல்லூரி செல்வதற்காகப்  புதிதாக தைத்த ஆடையும் புத்தம் புது பாட்டா செருப்பும்அணிந்து ஒரு புது பொழிவுடன் கல்லூரிக்கு தயாறானான். அவனுடைய இஷ்ட கடவுளான ஆஞ்சநேயரை வேண்டி 30 நிமிடம் முன்னரே வகுப்பிற்கு சென்றான், முதல் வரிசையில் இடம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற கவலையில். மாணவ மாணவிகள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.  எல்லா மாணவர்களும் ஜீன்ஸ் பேன்ட், டி-ஷர்ட், நைக்கி ஷூஸ் அணிந்திருந்தனர். அதுவும் இல்லமால் அனைவரும் நுனிநாக்கு ஆங்கிலம் பேசினர். சிலர் அகிலனை பார்த்து ஒரு சின்ன புன்னைகையுடன் அவனை கடந்து சென்றனர். எவரும் முதல் வரிசைக்கு போட்டி போட்டது போல் தெரியவில்லை. வகுப்பின் கடைசி வரிசையில் இருந்து இருக்கைகள் நிரம்ப ஆரம்பித்தது.

அகிலனுக்கு முகம் சிறுத்துப்போனது. வகுப்பில் இவன் மட்டும் தனிப்படுத்தப்பட்டது போல் உணர்ந்தான்.

'முதல் வரிசையில் யாரும் உட்காரக்கூடதோ?', எண்ணினான் அகிலன். முதல் முறையாக கல்லூரி வாழ்க்கையை நினைத்து பயந்தான் அகிலன்.

பேராசிரியர் வகுப்பில் நுழைந்ததும் நிசப்தம் ஏற்பட்டது.

"Good Morning students. Why don't you spread up and occupy all rows?", பேராசிரியர் பொதுவாக கூறினார். தயக்கத்துடன் சில மாணவர்கள் முன் வரிசைக்கு வந்தனர்.

வழக்கமான கல்லூரி முதல் நாள் போல் அறிமுகம் ஆரம்பம் ஆனது. அனைவரும் ஆங்கிலத்தில் அறிமுகம் செய்து கொண்டதை அகிலன் உற்று கவனித்தான். வார்த்தைப் பிறழாமல் அதைக்கூற வேண்டுமே என்று மனதில் மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்துக் கொண்டான்.

"Next... Next..." பேராசிரியர் கூப்பிட்டது அகிலனுக்கு கேட்கவில்லை.

கண்கள் திறந்திருந்தாலும் சிந்தனை ஆங்கிலப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அருகில் அமர்ந்திருந்த மாணவன் முழங்கையில் இடித்ததும் தூக்கத்தில் இருந்து எழுந்தது போல் திடுக்கிட்டு எழுந்தான் அகிலன்.

"My name Akilan. I come near Erode. Father farmer." என்று பாம்பை பார்த்தவன் போல சொல்லி முடித்தான். அகிலனில் பயத்தையும் அவன் பேசிய விதத்தையும் பார்த்து அனைவரும் சிரித்து விட்டனர்.

அகிலன் கூனிக்குறுகிப் போனான். கல்லூரி வாழ்க்கையின் மேல் அவனுக்கு இன்னும் பயம் ஏற்பட்டது.

"Silence, ஏன் எல்லாரும் சிரிக்கிறீங்க? ஒரு ஸ்டுடென்ட் தமிழ்  மீடியத்தில இருந்து வந்தா இப்படி தான் பண்ணுவீங்களா? ஆங்கிலம் ஒரு மொழி தான், அதுவும் அந்நிய மொழி. அது தெரியலன்னு ஒருத்தர ஏளனமா பாக்கறது ரொம்ப தப்பு. அது எந்த விதத்துலயும் ஒரு மனிதனோட அறிவ எடை போடற அளவு கொள் இல்ல." என்றார் பேராசிரியர் கடுமையாக.

"நீ உட்காருப்பா." என்றார் அகிலனைப் பார்த்து.

அகிலனுக்கு ஏற்கனவே பாதி மலை ஏறிய தாழ்வு மனப்பான்மை உச்சி மலையில் நின்று கொக்கரித்தது. அம்மா அப்பாவை உடனே பார்க்க வேண்டும் போல இருந்தது. வகுப்பில் இருந்து ஓடிவிடலாம் என்று கூட தோன்றியது. வகுப்பின் மிஞ்சிய முப்பது நிமிடம், முப்பது யுகமாக தோன்றியது. இன்னும் வெவ்வேறு ஆசிரியர்கள் வகுப்பில் அறிமுகப்படுத்திக் கொள்ளவேண்டுமே என்று பயந்தான்.


வகுப்பில் இருக்கும் மற்றவரைப் போல் எப்பொழுது ஆங்கிலம் பேசப் போகிறோம், அவர்களை போல் எப்பொழுது உடை உடுத்த போகிறோம், இந்த கல்லூரியில் நண்பர்கள் கிடைப்பார்களா, ஆங்கிலம் தெரியாமல் பாடம் படிக்க முடியுமா, வகுப்பில் என்னை ஏற்று கொள்வார்களா என்ற கேள்விகள் அகிலனை வாட்டியது. அப்பா அம்மாவின் கனவு, அகிலனின் படிப்பு ஆர்வம் அனைத்தும் சிதைந்து போனதாகத் தோன்றியது. வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டியவை இன்னும் நிறைய இருக்கிறதே என்று எண்ணினான்தனக்குள்ளே இவ்வளவு குறைகளா என்று வேதனைப்பட்டான்.

அப்பா அம்மாவிடம் தொலைபேசியில் பேச எண்ணினான். தன்னுடைய குழப்பத்தால் அவர்கள் வருத்தப்படுவார்களோ என்று முடிவை மாற்றிக்கொண்டான்.

அடுத்த நாள் வகுப்பிற்குச் செல்லவே தயக்கமாக இருந்தது. மனதை திடப்படுத்திக் கொண்டு வகுப்பில் முதல் மாணவனாக தனது இடத்தில் அமர்ந்திருந்தான். சக மாணவர்களின் அணிவகுப்பை மீண்டும் கவனித்துக்கொண்டிருந்தான். சிலர் அகிலனைப் பார்த்து சிறு புன்னைகையுடன் அவர் அவர் இடத்திற்குச் சென்றனர். அகிலனுக்கு அடுத்த யுகம் ஆரம்பம் ஆனது.

முதல் வகுப்பில் பேராசிரியர் செயல்முறைப் பயிற்சிக்காக அனைவரையும் அழைத்துச்சென்றார். அடுத்த ஒன்றரை மணி நேரத்திற்கு வகுப்பில் இருக்க தேவையில்லை என்று அனைவருக்கும் ஒரே குஷி. செயல்முறைக்கான விளக்கத்தை முடித்துவிட்டு மாணவர்களை ஆளுக்கொரு மாதிரிப்பொருளை எடுக்கச்சொன்னர். அனைவரும் என்ன செய்வது என்று யோசித்துக்கொடிருந்த சில மணித்துளிகளில் அகிலன் சென்று பேராசிரியர் கூறியவாறு பொருளை எடுத்துக்கொண்டு பேராசிரியர் முன் நின்றான். மற்ற யாவரும் அவர்கள் இடத்தை விட்டுக்கூட இன்னும் நகராமல்  நின்றுகொண்டிருந்தனர்.

வெரி குட் அகிலன்என்றார் பேராசிரியர். மற்ற மாணவர்களைப் பார்த்து "என்னப்பா, என்ன யோசிக்கிறீங்க? சந்தேகம் இருந்தா அகிலன் கிட்ட கேளுங்க, இல்லைன்னா நான் திரும்ப எக்ஸ்ப்ளைன் பண்றேன்.”

அதற்கு ஒரு மாணவன் "சார், அத எப்படி கையில எடுக்கிறது....ன்னுஎன்று இழுத்தான்.

ஏன் அகிலன் பண்ணல? இதற்கு இவ்வளவு கஷ்டப்பட்டா இந்த காலேஜ்க்கு எதுக்கு வந்தீங்க. அகிலன் மாதிரி படிக்கணும்னு ஆசைப்படற மத்த பசங்களுக்காவது இடம் கிடைச்சிருக்கும்ல. இந்த படிப்புக்கு இப்படி ஹீரோ மாதிரி டிரஸ் பண்ணிட்டு வந்தா போதாது, படிப்புக்குத் தகுந்த மாதிரி உங்கள மாத்திக்கத் தெரியணும். நீங்க எல்லாம் இந்த படிப்பப் படிச்சி மக்களுக்கு என்ன சேவை செய்ய போறீங்க. முதல்ல பாடம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி அகிலன் மாதிரி பசங்ககிட்ட இருந்து ஈடுபாட்டையும் ஒழுக்கத்தையும் கத்துக்கங்க" என்றார் விவசாய கல்லூரி பேராசிரியர் அன்பரசன்.

கையில் நெற்பயிரோடு பெருமிதம் பொங்க நின்றுகொண்டிருந்தான் விவசாயி மகன் அகிலன். பேராசிரியர் அன்பரசனின் வார்த்தைகள் அகிலனின் காயத்திற்கு மருந்தாக இருந்தது.

'இந்த காலேஜ்ல படிக்க இவங்கதான் எங்கிட்ட இருந்து கத்துக்கணுமா?' அகிலனுக்கும் குழப்பம் தெளிந்து நம்பிக்கை மீண்டது.

Comments

Post a Comment

Popular posts from this blog

அன்றும் இன்றும்

Day 2 - Way too many puddles to cross to get to Sarchu